நியூட்ரினோ மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையில் ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்
தேவாரம்,
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் நாம் தமிழர் கட்சியினர் 50–க்கும் மேற்பட்டோர் அம்பரப்பர் மலையில் ஏறினர். அவர்கள் கட்சிக்கொடியை கையில் பிடித்து இருந்தனர்.
பின்பு மலையில் ஒரு இடத்தில் கூட்டமாக நின்று கோஷமிட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மலையில் இருந்து கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மலையில் இருந்து கீழே இறங்கினர். பின்பு நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியினர் பொட்டிப்புரம் அருகில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.