மத்திய அரசை கண்டித்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மையம் சூறை; 300 பேர் கைது
காவிரி லோண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியபடி தமிழக வாழ்வுரிமைக்கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நேற்று வரி கொடுக்காமல் வாகனங்கள் அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார். அதன்படி காலை 11 மணியளவில் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் 300–க்கும் மேற்பட்ட கட்சியினர் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி மையத்தில் திரண்டனர். போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட போலீசார் சுங்கச்சாவடி மையத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
காலை 11.20 மணியளவில் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் 20–க்கும் மேற்பட்ட கார்களில் சுங்கச்சாவடி மையத்துக்கு வந்தார். அப்போது ஊழியர்கள், நீண்ட வரிசையில் நின்ற வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணத்தை வசூல் செய்து, வாகனங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதைபார்த்து ஆத்திரமடைந்த வேல்முருகனின் ஆதரவாளர்கள் திடீரென கொடிகளை கட்டியிருந்த இரும்பு குழாய், மரக்குச்சிகளால் சுங்க கட்டணம் வசூல் செய்யும் 10 வழித்தடத்தில் இருந்த மையங்களில் கண்ணாடி அடித்து உடைத்து சூறையாடினார்கள். மேலும் மையத்துக்குள் இருந்த நாற்காலி, கணினி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொருக்கி, அங்கிருந்த தடுப்பு கட்டைகளை சாலையில் தூக்கி வீசினார்கள். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதைபார்த்த போலீசார், சுங்கச்சாவடி மையத்தை அடித்து சேதப்படுத்திய கட்சியினர் சிலரை கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். இதைபார்த்து மேலும் ஆத்திரமடைந்த தொண்டர்கள் போலீசாரை, வழிமறித்து, கைது செய்தவர்களை வேனில் ஏற்றி செல்ல எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கட்சி தொண்டர்களுக்கும், போலீசா£ருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனிடையே வேல்முருகன் மற்றும் கட்சி தொண்டர்கள் சுங்கச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு காவிரி லோண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன் உள்பட 300 பேரை கைது செய்து, வேனில் ஏற்றி சென்று உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். வேல்முருகன் கைது செய்யப்பட்டதை அறிந்த கட்சி தொண்டர்கள் செந்தில், குணா உள்ளிட்ட 3 பேர், தாங்கள் கேனில் கொண்டுவந்த மண்எண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது மண்டபம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தீக்குளிக்க முயன்ற 3 பேரிடம் இருந்த மண்எண்எண்ணெய் கேனை பிடுங்கி, அவர்களை கைது செய்தனர்.
முன்னதாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து பலகட்ட போராட்டங்களை தமிழக வாழ்வுரிமைக்கட்சி அறிவித்திருந்தது. முதற்கட்டமாக மத்திய அரசுக்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடி மையங்களில் (வரி கொடா) வரி கொடுக்காமல் வாகனங்களை அனுப்பும் போராட்டத்தை இன்று(அதாவது நேற்று) நடத்தி உள்ளோம். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு போராட்டம் நடத்தியபோது, ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் வரி வசூர் செய்வதை பார்த்த, கட்சி தொண்டர்கள் ஆத்திரத்தில் சுங்கச்சாவடி மையத்தில் கட்டண வசூல் செய்யும் அறைகளை அடித்து நொருக்கி விட்டார்கள்.
ஆனால் மற்ற சுங்கச்சாவடி மையங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி உள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஜாதி, மதம் கடந்து காவிரி நீருக்காகவும், தமிழகத்தின் உரிமைக்காகவும் போராட தயார் ஆகி விட்டார்கள். நாங்கள் அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான அனைத்து அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்த உள்ளோம். காவிரி நீருக்காக தன்னிச்சையாக போராடி வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை ஒடுக்கி வரும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இனியும் தமிழக அரசு, மத்திய அரசோடு இணக்கமாக இருக்கக்கூடாது. தமிழகத்தின் உரிமைக்காக நாம் அனைவரும் போராடவேண்டும்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.