காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர் சாலைமறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 April 2018 4:30 AM IST (Updated: 2 April 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 204 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் நேற்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் நடந்தது. இதற்கு எம்.எல்.ஏ. பெரியண்ணன்அரசு, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டு, மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டை டவுன் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 47 பேரை கைது செய்தனர்.

ஆலங்குடி, கறம்பக்குடி

ஆலங்குடியில் உள்ள வடகாடு முக்கத்தில் ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது போலீசார் கைது செய்தனர். இதைப்போல கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் தி.மு.க. சார்பில் நகர செயலாளர் முருகேசன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அறந்தாங்கி

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறந்தாங்கி பஸ்நிலையம் முன்பு நடந்த சாலை மறியலிலுக்கு, திருமயம் தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி தலைமை தாங்கினார். அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ. உதயம்சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட அவை தலைவர் பொன்துரை, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. ரகுபதி உள்பட 67 பேரை அறந்தாங்கி போலீசார் கைது செய்தனர்.

கீரனூர்-ஆவூர்

இதேபோல கீரனூரில் தி.மு.க.சார்பில் சாலைமறியலில் ஈடுபட்ட குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகர பொறுப்பாளர் வக்கீல் அண்ணாத்துரை உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவூர் அருகே ஆம்பூர்பட்டி நால்ரோட்டில் விராலிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சாலை மறியல் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் சத்தியசீலன், மாவட்ட பிரதிநிதி மண்டையூர் பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் விளாப்பட்டி சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 204 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story