நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சிகள் குரல் கொடுக்காதது வேதனை தருகிறது - வைகோ


நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சிகள் குரல் கொடுக்காதது வேதனை தருகிறது - வைகோ
x
தினத்தந்தி 2 April 2018 4:30 AM IST (Updated: 2 April 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக தமிழக கம்யூனிஸ்டு கட்சிகள் குரல் கொடுக்காமல் இருப்பது வேதனை தருவதாக வைகோ கூறினார்.

உசிலம்பட்டி,

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மதுரையில் நேற்று முன்தினம் விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கினார். இதன் தொடக்க விழா மதுரை பழங்காநத்தத்தில் நடந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நடை பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் நேற்று அவர் 2-வது நாளாக மதுரை மாவட்டம் செக்கானூரணியில் இருந்து நடைப்பயணமாக புறப்பட்டார். வழிநெடுகிலும் அவர் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு குரல் எழுப்பினார். பின்னர் அவர் நேற்று மாலை உசிலம்பட்டியை வந்தடைந்தார். பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கடும் பாதிப்பு

பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-

தேனி மாவட்டம் போடி அருகே நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதனையும் மீறி இந்த ஆய்வு திட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் அணுக் கழிவுகளை அங்கு தேக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் விளைநிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.

வேதனைக்குரிய விஷயம்

மேற்கு தொடர்ச்சி மலை தமிழகத்தில் மட்டுமின்றி குஜராத்திலும் உள்ளது. ஆனால் பிரதமர் மோடி அங்கு அமைக்காமல் நமது தேனி மாவட்டத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். கேரள எல்லை ஓரத்தில் உள்ள போடி பகுதியில் இந்த திட்டம் அமைப்பதால் 2 மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டு கட்சியினர் நம்முடன் சேர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்டு கட்சியினர் இதற்காக குரல் கொடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். தமிழ்நாட்டை பாதிக்கும் வகையில் உள்ள இந்த நியூட்ரினோ திட்டத்தை நிறுத்தக்கோரி நான் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடைபயணத்தின் போது மதுரை மாவட்டம், சர்க்கரைபட்டியில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்திற்கு இது ஒரு அபாயகரமான காலம். ஒரு பக்கம் மோடி தமிழகத்தை அழிக்க நினைக்கிறார், அதற்கு தமிழக அரசு சாதகமாக செயல்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிய வாய்ப்பில்லாமல் செய்து விடலாம் என நரேந்திர மோடி காலால் இட்ட கட்டளையை எடப்பாடி அரசின் கீழே இருக்க கூடியவர்களும், எம்.பி.க்களும் தலையால் செய்து முடித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத மானக்கேடு, வெட்கக்கேடு“ என்றார். 

Next Story