நெல்லையில் பயங்கரம்: மது குடிக்க பணம் தர மறுத்த மனைவி அடித்துக்கொலை


நெல்லையில் பயங்கரம்: மது குடிக்க பணம் தர மறுத்த மனைவி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 2 April 2018 4:45 AM IST (Updated: 2 April 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெல்லை,

நெல்லை வண்ணார்பேட்டை கம்பராமாயண தெருவை சேர்ந்தவர் காந்திமதி நாதன் (வயது 35). இவர் காய்கறி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி இசக்கியம்மாள் (30). இவர் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஈசுவரி (7) என்ற மகளும், வெற்றிவேல் (5) என்ற மகனும் உள்ளனர்.

காந்திமதி நாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்வாராம். நேற்று மதியமும் வழக்கம்போல் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர், பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

அடித்துக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த காந்திமதி நாதன், இசக்கியம்மாளை இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் இசக்கியம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் காந்திமதி நாதன் கதவை சாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இந்த நிலையில் இரவு வெகுநேரம் ஆகியும் இசக்கியம்மாள் வீட்டு கதவு சாத்தியபடியே கிடந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு இசக்கியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் இசக்கியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மோப்பநாய் ‘புளூட்டோ‘ சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது அங்கு மோப்பம் பிடித்து விட்டு அருகில் உள்ள பைபாஸ் ரோடு வரை ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

வலைவீச்சு

இந்த கொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள காந்திமதி நாதனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கணவரே அடித்துக் கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story