ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை அறிவிப்பார்


ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை அறிவிப்பார்
x
தினத்தந்தி 2 April 2018 4:30 AM IST (Updated: 2 April 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் கோவில் வருசாபிஷேக விழாவில் கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நல்ல முடிவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட கலெக்டரும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினரும் தமிழக அரசுக்கு அறிக்கை வழங்கி உள்ளனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து துறையினரிடமும் கருத்துகளை கேட்டறிந்து, நல்ல முடிவை அறிவிப்பார்.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு முதன் முதலாக அனுமதி வழங்கி, 25 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்மூலம் நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் விளம்பரம் தேடி கொள்கின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாளை (புதன்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகத்தில் முழு கடையடைப்பு போராட்டமும் நடத்தப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை தமிழக அரசு பெற்று தரும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அ.தி.மு.க. சார்பில் நாளை (புதன்கிழமை) நடக்கும் உண்ணாவிரத போராட்டம் நாடகம் கிடையாது. ஈழ தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து விட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக கூறி, 50 நிமிடத்தில் உண்ணாவிரதத்தை கைவிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதிதான் நாடகமாடினார். அவரது பேச்சை கேட்டு நம்பி, மறைவிடத்தில் இருந்து வெளியே வந்த தமிழர்களை இலங்கை ராணுவம் கொத்து கொத்தாக கொன்று குவித்தது. அதுதான் நாடகம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 

Next Story