மத்திய அரசை கண்டித்து திருச்சி விமான நிலையம் நாளை முற்றுகையிடப்படும் அய்யாக்கண்ணு பேட்டி


மத்திய அரசை கண்டித்து திருச்சி விமான நிலையம் நாளை முற்றுகையிடப்படும் அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 2 April 2018 4:30 AM IST (Updated: 2 April 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து திருச்சி விமான நிலையம் நாளை முற்றுகையிடப்படும் என புதுக்கோட்டையில் அய்யாக்கண்ணு கூறினார்.

புதுக்கோட்டை,

நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்திட வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் குமரி முதல் கோட்டை வரை 100 நாள் பயணத்தை மேற்கொண்டு உள்ளனர். கடந்த மாதம் 1-ந் தேதி குமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் பல்வேறு மாவட்டங்களின் வழியாக சென்று இறுதியில் சென்னை கோட்டையை சென்றடைகிறது.

இந்த நடைபயண குழுவினர் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்தொண்டைமான் ஆகியோருக்கும் அய்யாக்கண்ணு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் அவர்கள் அண்டக்குளம் வழியாக தஞ்சாவூரை நோக்கி தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

நாளை விமான நிலையம் முற்றுகை

புதுக்கோட்டைக்கு வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், மரபணு விவசாயத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதை தடை செய்ய வேண்டும் என கன்னியாகுமரி முதல் சென்னை வரை விழி்ப்புணர்வு பயணத்தை நடத்தி வருகிறோம்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

மேலும் மத்திய அரசை கண்டித்து நாளை (செவ்வாய்க்கிழமை) திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டமும், விமானத்தை மறிக்கும் போராட்டமும் நடைபெற உள்ளது. காவிரி பிரச்சினைக்காக அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் அறிவித்து உள்ளது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் இந்த போராட்டத்தில் முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் உள்ள சின்னப்பா பூங்காவில் ஆம்ஆத்மி கட்சி, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அருண்மொழி தலைமை தாங்கினார்.

இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், அவமதிப்பு செய்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கீரனூர்

முன்னதாக திருச்சியில் இருந்து கீரனூர் வந்த தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணுவிற்கு, மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அய்யாக்கண்ணு கீரனூர் கடைவீதி, பஸ்நிலையம் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து துண்டுபிரசுரங்களை வழங்கினார். 

Next Story