உளுந்தூர்பேட்டை, சின்னசேலத்தில் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு பூட்டுபோட்டு தி.மு.க.வினர் போராட்டம்


உளுந்தூர்பேட்டை, சின்னசேலத்தில் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு பூட்டுபோட்டு தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2018 3:45 AM IST (Updated: 3 April 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை மற்றும் சின்ன சேலத்தில் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.

சின்னசேலம், 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 31-ந் தேதி வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் தி.மு.க.வினர் 23 பேர் உள்பட 60 பேர் மனுதாக்கல் செய்தனர். இதற்கிடையில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வீரப்பன் தலைமையில் தி.மு.க.வினர் காலை 8 மணி அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு வந்திருந்தனர். தொடர்ந்து 11 மணி வரை அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர், கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் 2 பேரை அலுவலகத்துக்குள்ளேயே வைத்து பூட்டினர். பின்னர் அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தி.மு.க.வினர் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் என அறிவித்து விட்டு வேட்புமனு பரிசீலனையின் போது, அதிகாரிகள் மாயமாவது தொடர்கதையாகி வருகிறது என கூறினர். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் போஸ் தலைமையிலான போலீசார் பூட்டை உடைத்து ஊழியர்களை மீட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வசந்தவேல் தலைமையில் தி.மு.க.வினர், ஆளுங்கட்சிக்கு போலீசார் துணை போவதாக கூறி, அதனை கண்டித்து கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் முட்செடிகளை கொண்டு வந்து அலுவலகத்தின் வாசலில் போட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமைதியான முறையில் தேர்தல் நடக்க நடவடிக்கை எடுப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் உறுதி அளித்தார். இதை ஏற்று தி.மு.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சின்னசேலம் அருகே கனியாமூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலில் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனை செய்யாமலேயே ஆளுங்கட்சியை சேர்ந்த 11 பேரை தேர்வு செய்து, அதற்கான பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இயக்குனர் பொறுப்புக்கு தனது மனைவி சத்தியகலாவின் பெயர் இல்லாததை கண்டு மனவேதனை அடைந்த வெங்கடேசன்(32) என்பவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை தடுத்து சமாதானப்படுத்தினர். இதுகுறித்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் பாபு, சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னசேலம் அருகே விஜயபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இயக்குனர் தேர்தலுக்காக 26 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்புமனு பரிசீலனை நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று தேர்தல் அதிகாரி ஆனந்தன் வேட்புமனு பரிசீலனைக்கு வராமலேயே, 11 பேர் தேர்வு செய்யப்பட்டதாக கூறி அதற்கான பட்டியல் ஒட்டப்பட்டதாம். இதனால் மீதமுள்ள 15 பேர், பால் விற்பனை செய்ய வந்தவர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் ராஜசுப்பிரமணியன், மற்றும் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மேல்நாரியப்பனூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 28 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அதிகாரிகள் வராமலேயே ஆளுங்கட்சிக்கு சாதகமாக இயக்குனர் தேர்தல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு பூட்டு போட்டு விட்டு சென்றனர்.

Next Story