மாவட்டத்தில் 19 இடங்களில் தி.மு.க.-கூட்டணி கட்சியினர் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 19 இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,372 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப் போராட்டம் நேற்று 2-வது நாளாக நடந்தது.
வானூர் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் போட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, ராதாமணி மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் மைதிலி ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ் உள்பட 166 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் தி.மு.க.வினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் நா.புகழேந்தி தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, பிரபாகரன், வளவனூர் நகர செயலாளர் ஜீவா முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சம்பத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், ஒன்றிய துணை செயலாளர் ஆறுமும், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் குமரேசன், முன்னாள் சி.எம்.எஸ். தலைவர் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனால் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட பொருளாளர் புகழேந்தி உள்பட 120 பேரை வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.
அதே போல் விழுப்புரம் நகர தி.மு.க. சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நகர செயலாளர் சக்கரை தலைமையிலான தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, முன்னாள் தொண்டர்படை அமைப்பாளர் மணி, இளைஞரணி துணை அமைப்பாளர் தயா இளந்தரையன், மகளிரணி துணை அமைப்பாளர் தேன்மொழி, கபாலி,அமரஜி உள்பட 81 பேரை போலீசார் கைது செய்து விழுப்புரம் கே.கே. ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். இந்த சாலை மறியலினால் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார், மறியலில் ஈடுபட்ட உதயசூரியன் எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வநாயகம், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட 100 பேரை கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் தி.மு.க.வினர் தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் பொன்ராமகிருஷ்ணன், தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலையில் மாவட்ட பிரதிநிதிகள் எத்திராசு, மலையரசன் ஆகியோர் கண்டன கோஷமிட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உள்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக ரிஷிவந்தியம் அருகே பகண்டைகூட்ரோட்டில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை சங்கராபுரம் போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் நயினா முகம்மது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயரவிதுரை, ஜெயந்தி ரவி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வெற்றிவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பொன்முடி உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட 1,372 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது.
Related Tags :
Next Story