உடுமலை அரசு கலைக்கல்லூரி நிதியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
உடுமலை அரசு கலைக்கல்லூரி நிதியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரியில் ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை,
உடுமலை அரசு கலைக்கல்லூரியின் நிதியாளர் சிங்கப்பெருமாள், கல்லூரி ஊழியர்களையும், பேராசிரியர்களையும் அவமதிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த இந்த கல்லூரி பேராசிரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சமீபத்தில் கல்லூரி கல்வி கோவை மண்டல இணை இயக்குனர் கலா உடுமலை அரசு கலைக்கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தி கல்லூரி கல்வி இயக்குனருக்கு (சென்னைக்கு) அறிக்கை அனுப்பினார். அதைத்தொடர்ந்து கல்லூரி நிதியாளர் சிங்கப்பெருமாள் பல்லடம் அரசு கலைக்கல்லூரிக்கு நிதியாளராக மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. அதுபோல் அலுவலக ஊழியர்களான பண்டக காப்பாளர் ஆர்.சண்முகசுந்தரம், திருச்சி திருவெறும்பூர் அரசு கலைக்கல்லூரியில் பண்டக காப்பாளர் பணியிடத்துக்கும், சங்க துணைத்தலைவரான அலுவலக உதவியாளர் டி.சிவக்குமார் திருப்பூரில் உள்ள எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரி அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கும் மாற்றப்பட்டு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் விடுமுறைக்கு பின்னர் நேற்று கல்லூரி திறக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் (முழுகூடுதல் பொறுப்பு) விடுமுறையில் சென்றிருந்ததால் நேற்று முதல்வர் பொறுப்பை மூத்த பேராசிரியர் உ.பெ.ராமலிங்கம் கவனித்தார். அப்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட நிதியாளர் சிங்கப்பெருமாள் இந்த கல்லூரியின் பணி பொறுப்புகளை ஒப்படைத்தார். அப்போது அவருக்கு இந்த கல்லூரியில் இருந்து மாறுதலாகி செல்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. அதற்காக அவர் கல்லூரி முதல்வரின் அறையில் அமர்ந்திருந்தார்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் இந்த கல்லூரியின் அலுவலக ஊழியர்கள் கல்லூரி முதல்வரின் அறைக்கு முன்பு அமர்ந்து நிதியாளர் வெளியில் வராதபடி முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் நிதியாளர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது போதாது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இடம் மாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள் சண்முகசுந்தரம், சிவக்குமார் ஆகியோரின் பணியிடம் மாற்றம் உத்தரவை ரத்து செய்து அவர்கள் இதே கல்லூரியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்களும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்களும் அங்கு வந்து குரல் எழுப்பினார்கள். இதற்கிடையில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட 2 ஊழியர்களும் இடமாற்றத்திற்கான உத்தரவை வாங்க மறுத்துவிட்டதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் முற்றுகை போராட்டம் இரவு வரை நீடித்தது.
Related Tags :
Next Story