காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க.-கூட்டணி கட்சியினர் சாலை மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூர், விருத்தாசலத்தில் தி.மு.க.-கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் உள்பட 195 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. வர்த்தக சங்கங்களும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தி.மு.க.-கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று தி.மு.க.-கூட்டணி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கடலூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் பல்வேறு கட்சியினரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்று கடலூர் பாரதிசாலை, பீச்ரோடு சந்திப்பில் மறியல் போராட்டம் செய்தனர்.
இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு, பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், தேசிய உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாககுழு உறுப்பினர் மணிவாசகம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ராமலிங்கம், குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முல்லைவேந்தன், பாலஅறவாழி, பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், திராவிடர் கழக தலைவர் தென்.சிவகுமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் அஷ்ரப்அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகம்மதுநுமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலாளர் முகமதுரபீக் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்து மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
முன்னதாக நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்த தி.மு.க.- கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் வேண்டுமென்றே திட்டமிட்டு காலம் கடத்தி, கர்நாடக தேர்தலை கருதி அரசியல் நோக்கத்துடன் தமிழகத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்து நாளை மறுநாள் மாவட்டத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர் ரெயில் மற்றும் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் போன்ற போராட்டங்களை அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் கலந்துபேசி நடத்துவது, மரக்காணத்தில் இருந்து வேளாங்கண்ணிவரை 23 இடங்களில் ஹைட்ரோ கார்ப்பரேட் கிணறுகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதை உடனே நிறுத்த வேண்டும். இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பஸ்நிலையம் அருகே மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கணேசன் எம்.எல்.ஏ. உள்பட 120 பேரை கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மறியல் போராட்டம் காரணமாக விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் விருத்தாசலத்தில் நீதிமன்ற வக்கீல்கள் நேற்று நீதிமன்றம் முன்பு விருத்தாசலம்-சேலம் சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு வக்கீல் சரவணன் தலைமை தாங்கினார். வக்கீல்கள் சந்திரசேகரன், அம்பேத்கர், ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் அருள்குமார், சிவசங்கர், அசோக்குமார், அப்துல்லா, மோகன், ரவி, ராஜா, தரணி, செந்தில், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story