மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்


மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2018 3:45 AM IST (Updated: 3 April 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்ணாடம் அருகே கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணாடம் 

பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றில் நேற்று முன்தினம் அதிகாலை அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் தலைமையில் கும்பல் ஒன்று பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணலை ஏற்றி கடத்தி சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த செம்பேரி கிராம மக்கள், வெள்ளாறு பாதுகாப்பு சங்க தலைவர் தனவேல் தலைமையில் மணல் கடத்தி வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல்காரர்கள், கிராம மக்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், அதற்கு உடந்தையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வை கண்டிப்ப தோடு மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கையில் பதாகைகளுடன் நேற்று வெள்ளேரியில் கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செம்பேரி வெள்ளாற்றங்கரையில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை தமிழக அரசிடம் ஒப்படைப்போம் என்று கூறி கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், பெண்ணாடம் போலீஸ் இன்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.

தொடர்ந்து கிராம மக்கள், அதிகாரிகளை வெள்ளாற்றில் மணல் கடத்தல் நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு மணல் கடத்தல் நடைபெற்று இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர்.

தொடர்ந்து மணல் எடுக்கப்படும் பகுதி இரு மாவட்டங்களின் எல்லையாக உள்ளதால், இரு மாவட்ட அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு மணல் கடத்தலை தடுத்து நிறுத்துவது எனவும், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது எனவும், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்ற கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story