தி.மு.க.வினர் மறியல் போராட்டம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது


தி.மு.க.வினர் மறியல் போராட்டம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது
x
தினத்தந்தி 2 April 2018 10:00 PM GMT (Updated: 2 April 2018 8:18 PM GMT)

சென்னை புறநகர் பகுதிகளில், மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

அந்த வகையில் நேற்று சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

ஆலந்தூர் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் என்.சந்திரன் தலைமையில் முன்னாள் கவுன்சிலர்கள் முத்து, ஜெயக்குமார், பாபு ஜெகதீஸ்வரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பகுதி தலைவர் சீராளன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் வாணுவம்பேட்டை- மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்தனர்.

அப்போது கைது செய்யப்பட்டவர்களை அழைத்து செல்ல வாகனங்கள் இல்லாததால், அந்த வழியாக வந்த மாநகர பஸ்சை நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு, கைது செய்யப்பட்டவர்களை பஸ்சில் ஏற்றி சென்றனர். இதனால் பொதுமக்கள் சாலையில், வெயிலில் வேறு பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

இதே போல், ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான குணா, மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் கோல்டு பிரகாஷ் உள்பட தி.மு.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் ஆலந்தூர் சுரங்கப்பாதை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

கொட்டிவாக்கத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையிலும், வேளச்சேரி பகுதியிலும் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர் பஸ் நிலையம் முன்பு மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் கே.பி.சங்கர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி வட்டசெயலாளர் ஆதி குருசாமி, அவைத்தலைவர் ராமநாதன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

இதே போல், தேரடியில் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், அவைத்தலைவர் முத்தையா உள்பட தி.மு.க.வினர் 150 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

மணலியில் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயபுரம் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் ராயபுரம் போலீஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

மதுரவாயல் தொகுதி தி.மு.க சார்பில் பகுதி செயலாளர் கணபதி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் காரம்பாக்கத்தில் இருந்து ஆற்காடு சாலை வழியாக ஊர்வலமாக வந்து போரூர் நான்கு சாலை சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போரூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

தண்டையார் பேட்டையில், ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. பகுதி செயலாளர் மருது கணேஷ் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 250-க்கும் மேற்பட்டோர் வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் தண்டையார் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

பெரம்பூர் தொகுதி வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர் முருகன் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் எம்.கே.பி. நகர் மீனாம்பாள் சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல், பெரம்பூர் தொகுதி தெற்கு பகுதி செயலாளர் ஜெயராமன் தலைமையில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வருமானவரி அலுவலகத்துக்கு பூட்டுபோட முயற்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் 50 பேர் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டு போட வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Next Story