பேரணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்து அண்ணன்-தங்கை சாவு


பேரணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்து அண்ணன்-தங்கை சாவு
x
தினத்தந்தி 2 April 2018 10:15 PM GMT (Updated: 2 April 2018 8:25 PM GMT)

பேரணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்து அண்ணன்-தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே உள்ள மேல்செண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சுமித்ரா. இவர்களுக்கு மணீஷ்குமார் (வயது 5) என்ற மகனும், லஷ்மிதா (4) என்ற மகளும் உள்ளனர். மணீஷ்குமார் பல்லலகுப்பம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான்.

விவசாயியான செந்தில்குமார் மேல்பட்டி அருகே உள்ள கொல்லகொட்டாய் பகுதியில் ரெயில்வே இருப்பு பாதை அருகில் ஒரு விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் மற்றும் மாட்டு தீவனப்பயிர் சாகுபடி செய்து வருகிறார். நேற்று காலையில் அவர் விவசாய பணிகளில் ஈடுபட்டு இருந்தார். அவருக்கு மனைவி சுமித்ரா தனது மகன், மகளுடன் சாப்பாடு கொண்டு சென்றார்.

அங்கு மணீஷ்குமாரும், லஷ்மிதாவும் கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் தண்ணீர் நிரம்பியிருந்த அந்த கிணற்றில் தவறி விழுந்தனர்.

இதனை பார்த்த சுமித்ரா கூச்சலிட்டு குழந்தைகளை காப்பாற்றுமாறு கதறினார். பின்னர் கிணற்றில் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றதாக கூறப்படுகிறது. செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்து பக்கத்து நிலத்தில் உள்ளவர்களை அழைத்து வந்து அவர்களுடன் கிணற்றில் குதித்து காப்பாற்ற முயன்றார். அப்போது தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மனைவி சுமித்ரா, மகள் லஷ்மிதா ஆகியோரை மட்டும் காப்பாற்றினார். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மணீஷ்குமார் கிணற்றில் ஆழமான பகுதியில் சகதியில் சிக்கியதால் காப்பாற்ற முடியாமல் போனது. இதுகுறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மணீஷ்குமாரை தேடினர். சிறிது நேரத்திற்கு பிறகு மணீஷ்குமாரை பிணமாக மீட்டனர்.

இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லஷ்மிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் தவறி விழுந்து அண்ணன்-தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story