காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று ரெயில் மறியல் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று ரெயில் மறியல் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 April 2018 10:30 PM GMT (Updated: 2 April 2018 8:49 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, காரைக்காலில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

காரைக்கால்,

காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச்சங்க கூட்டம், காரைக்காலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அப்துல்சலீம், பொதுச்செயலாளர் திருநாராயணன், துணைச் செயலாளர்கள் சண்முகநாதன், தங்கராசு, பொருளாளர் கேசவன், துணைப் பொருளாளர் குமரவேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் சங்கத் தலைவர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக, புதுச்சேரி விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார கால அவகாசத்தை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அளித்தது. ஆனால் கடைசி நாள் வரை பூர்வாங்கப்பணிகள் எதையும் செய்யாமல் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு அலட்சியம் செய்துவிட்டது.

மத்திய அரசின் இந்த அலட்சியத்தால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இந்த பாதிப்பை மத்திய பா.ஜ.க. அரசு கருத்தில்கொள்ளவில்லை. தமிழக, புதுச்சேரி விவசாயிகள் நலனைப் புறந்தள்ளிய பா.ஜ.க. அரசின் உள்நோக்கத்தை மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர்.

மத்திய அரசின் இந்த அலட்சியப்போக்கினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, இன்று (செவ்வாய்க்கிழமை) காரைக்கால் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்துக்கு அனைத்து கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் ஆதரவு தரவேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story