மலை கிராமங்களில் கால்நடை கிளை மருந்தகங்கள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்


மலை கிராமங்களில் கால்நடை கிளை மருந்தகங்கள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 3 April 2018 4:00 AM IST (Updated: 3 April 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை தாலுகாவில் மலை கிராமங்களில் கால்நடை கிளை மருந்தகங்களை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை தாலுகா மலை கிராமமான மாடக்கல் ஊராட்சி ஒசதொட்டி, கோட்டையூர் மற்றும் நாட்றாம்பாளையம் ஊராட்சி அத்திமரத்தூர் ஆகிய கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 3 கால்நடை கிளை மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் வேலாயுத பெருமாள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசியதாவது:-

எண்ணற்ற திட்டங்கள்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அனைத்து மருத்துவ வசதிகளும் கால்நடைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கால்நடை துறைக்கு நிதியை ஒதுக்கி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார். அதன்அடிப்படையில் தற்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கால்நடைதுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மலை கிராம மக்கள் தங்களின் கால்நடைகளுக்கு உரிய மருத்துவ வசதி கிடைப்பதற்காக இன்றைய தினம் கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் பெற்று பயன் அடைய வேண்டும். விரைவில் கும்ளாபுரம் கிராமத்தில் கால்நடை துணை மருந்தகம் கொண்டு வரப்படும். மேலும் இப்பகுதி மக்கள் பஸ் வசதி கோரி மனு கொடுத்துள்ளர்கள். உடனடியாக இங்கு கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியின் கால்நடை மருத்துவர்கள் சின்னசாமி மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் ஜெயப்பிரகாஷ், சிட்டி ஜெகதீஷ், ஜாகீர் உசேன், கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story