திருவெறும்பூர் பகுதி பொதுமக்கள் பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்


திருவெறும்பூர் பகுதி பொதுமக்கள் பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 2 April 2018 10:45 PM GMT (Updated: 2 April 2018 9:28 PM GMT)

குடியிருப்புகளை காலி செய்யக்கோரி ரெயில்வே நிர்வாகம் வற்புறுத்துவதால் பட்டா கேட்டு திருவெறும்பூர் பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் உள்பட அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது திருவெறும்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட பர்மா காலனி, திடீர் நகர், காவேரி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் சேர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்களில் சிலர் கலெக்டர் ராஜாமணியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், திருவெறும்பூர் தாலுகா சர்வே எண்கள் 181, 182 கூத்ததைப்பார் கிராமம் சர்வே எண்கள் 341, 342, 343 பகுதிகளில் பர்மா அகதிகள் மற்றும் ரெயில்வேயில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்து வந்தவர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம்.

தாசில்தாரை முற்றுகை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகம், எங்கள் குடியிருப்புகளை காலி செய்ய வற்புறுத்தியபோது அப்போது இருந்த கலெக்டரிடம் இதுகுறித்து முறையிட்டு திருவெறும்பூர் தாசில்தார் மூலம் ரெயில் நிர்வாகத்துக்கு மேற்படி இடங்கள் எந்த வகையில் கையகப்படுத்தப்பட்டது என்பதை தெரியப்படுத்த கோரினோம். இதுவரை தாசில்தார் தெரிவிக்கவில்லை. மீண்டும் குடியிருப்புகளை காலி செய்யக்கோரி தற்போது ரெயில்வே நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. இதனால் எங்கள் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிற நிலை ஏற்படும். மேற்படி இடங்கள் பொதுமக்களுக்கே சொந்தம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு வெளியே வந்தபோது திருவெறும்பூர் தாசில்தார் ஷோபனா அங்கு நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட அவர்கள் தாசில்தாரை முற்றுகையிட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று அவர்களிடம், தாசில்தார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மணல் சேமிப்பு கிடங்கு

மண்ணச்சநல்லூர் தாலுகா கொணலை அருகே உள்ள கல்பாளையம் கிராமத்தில் மணல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அகில பாரத இந்து மகா சபா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் இளையராஜா தலைமையில் லால்குடி ஒன்றிய செயலாளர் விக்னேஷ் உள்ளிட்ட அக்கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், லால்குடி தாலுகா மணக்கால் கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நங்கையாரம்மன் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் ஒருவர் கோவிலை ஆகமவிதிப்படி நடை திறக்காமலும், பெண் பக்தர்களிடம் தகாத முறையிலும் நடந்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம்

எடமலைப்பட்டிபுதூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் பணி, தஞ்சாவூர் மெயின் சாலையில் இருந்து கரூர் சாலையை இணைக்கும் திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மணிகண்டம் அருகே கட்டப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமையில் உறுப்பினர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சோமரசம்பேட்டை, அதவத்தூர், நாச்சிக்குறிச்சி பகுதிகளில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத கட்டிட தொழிலாளர்கள் 251 பேருக்கு மணிகண்டம் அருகே உள்ள துறைக்குடி பஞ்சாயத்தில் இலவச வீட்டு மனைக்காக தேர்வு செய்த இடத்தை உடனே வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், திருச்சி 12-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தேசிய கொடியுடன் வந்த சுதந்திர போராட்ட தியாகி

திருச்சி பாரதியார் சாலையை சேர்ந்தவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான முத்துசாமி (வயது 93) நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க தேசிய கொடியுடன் வந்தார். பின்னர் கலெக்டர் ராஜாமணியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், நான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் சிப்பாயாகப் பணியாற்றினேன். அதன்பிறகு இந்திய தேசிய ராணுவத்திலும் உறுப்பினராகப் பணியாற்றினேன். பின்னர் இந்திய சுதந்திர போராட்ட வீரராகவும் இருந்ததற்காக எனக்கு அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இப்படி நாட்டுக்காக பணியாற்றிய நான் வசிக்கும் வீட்டு இடத்துக்கு பட்டா கேட்டு கடந்த 8 ஆண்டுகளாக அலைந்து வருகின்றேன். இந்த இடத்துக்கு பட்டா கேட்டு கடந்த 2011-ம் ஆண்டு முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அங்கிருந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியதாக எனக்கு பதில் வந்தது. ஆனால் இங்கு அணுகியபோது அப்படி ஏதும் கடிதம் வரவில்லை என்று கூறினர். இதனால் எனக்கு மிகுந்த மனவேதனையாகவுள்ளது. எனக்கு வயது 93 ஆன நிலையில் என்னை அலைச்சலுக்கு உள்ளாக்காமல் பட்டா வழங்கிட வேண்டும், என்று கூறியிருந்தார்.

லால்குடி தாலுகா பெருவளநல்லூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது. தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் வேண்டும், என்று கூறியிருந்தனர். 

Next Story