மாவட்டத்தில் முதல் கட்டமாக 8 கூட்டுறவு சங்கங்களில் வாக்குப்பதிவு
சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 8 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்தது. உறுப்பினர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கடந்த 26-ந் தேதி 293 கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. இவற்றில் 285 கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகக்குழு உறுப்பினர்கள்(இயக்குனர்கள்) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதம் உள்ள 8 சங்கங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
அதன்படி, கொளத்தூர் ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், சேலம் பள்ளப்பட்டி ராம்நகரில் உள்ள மாவட்ட பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம், சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்தில் இயங்கும் சேலம் மாவட்ட சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், ஆத்தூர் வட்டார தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் சிக்கன நாணய சங்கம், ஆத்தூர் ஒன்றிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், தலைவாசல் ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், சங்ககிரி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் ஆகியவற்றில் வாக்குப்பதிவு நடந்தது.
8 கூட்டுறவு சங்கங்களிலும் 50 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 139 பேர் போட்டி களத்தில் இருந்தனர். 8 சங்கங்களிலும் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. அதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
சேலம் நாட்டாண்மை கழக கட்டிடத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 3 அணிகள் போட்டி களத்தில் இருந்தன. அணிக்கு தலா 7 பேர் வீதம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். உறுப்பினர்கள் அடையாள அட்டையை சரிபார்த்து, வாக்களிக்க தேர்தல் அலுவலர் அனுமதித்தார். அவர்கள் ஓட்டுச்சீட்டில் முத்திரை குத்தி வாக்குப்பதிவு செய்தனர். மாவட்டம் முழுவதும் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்த 8 சங்கங்களிலும் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story