ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் போராட்டம் தொடர்கிறது


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் போராட்டம் தொடர்கிறது
x
தினத்தந்தி 3 April 2018 10:30 PM GMT (Updated: 3 April 2018 5:34 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் போராட்டம் தொடர்கிறது. கீதாஜீவன் எம்.எல்.ஏ., எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் நேற்று கிராமமக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்கிறது. இவர்களின் போராட்டம் நேற்று 51-வது நாளாக நீடித்தது. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பண்டாரம்பட்டி கிராமமக்கள் நேற்று 3-வது நாளாகவும், வடக்கு சங்கரப்பேரி பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் ஏ.சி.முத்தையா ஐ.டி.ஐ. முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த பிரேம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதேபோன்று தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், சாயர்புரம் போப் கல்லூரி, மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அ.குமரெட்டியபுரம் மக்களை கீதாஜீவன் எம்.எல்.ஏ. நேற்று மதியம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ள அடிபம்பில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை குடித்து பார்த்தார். தொடர்ந்து மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். இதில், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும் போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலத்தடி நீர், காற்று, நிலம் மாசு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தி.மு.க. மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அடுத்தக்கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன். இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டரை சந்தித்து பேசுவேன் என்றார்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் டி.ஆர்.சந்திரசேகரன், துணைத்தலைவர் தனுஷ்கோடி, துணை பொதுச் செயலாளர் இளஞ்சேரன், அமைப்பு செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் ராஜ்கமார் மற்றும் நிர்வாகிகள் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை சந்தித்து எர்ணாவூர் நாராயணன் ஆதரவு தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கிராமமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சமத்துவ மக்கள் கழகம் சார்பில் இங்கு வந்து உள்ளேன். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த மாவட்டத்துக்கு ஒரு மந்திரி இருக்கிறார். தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி. இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு பாதிப்புகள் இருக்கிறது. தற்போது அரசு நோய் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை கண்டறிய ஆய்வு நடத்தி உள்ளது. இதில் நோய் தாக்கம் இருக்கும் பல ஊர்களை விட்டு விட்டார்கள். இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆலைக்கு அனுமதி கொடுக்க கூடாது. இந்த ஆலையை இங்கிருந்து அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story