நிரந்தர சத்துணவு மையம் அமைக்காததால் மாணவர்கள் அவதி


நிரந்தர சத்துணவு மையம் அமைக்காததால் மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 4 April 2018 4:30 AM IST (Updated: 4 April 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே நல்லூர் அரசு பள்ளியில் நிரந்தர சத்துணவு மையம் அமைக்கப்படாததால் மாணவர்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சோழவரம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் நாகத்தம்மன் நகர், அம்பேத்கர் நகர், வி.பி.சிங் நகர், பெருமாளடிபாதம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு படிக்க மாணவர்கள் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று பம்மதுகுளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.

செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று படிப்பதற்கு மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். எனவே நல்லூர் ஊராட்சி வி.பி.சிங் நகரில் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டித்தர வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடமும், மாவட்ட கலெக்டரிடமும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து வி.பி.சிங் நகரில் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கீடு செய்து புதிய அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்ட அரசு உத்தரவிட்டது. ஆனால், வி.பி.சிங் நகரில் உள்ள அரசு இடத்தில் அந்த கட்டிடம் கட்டப்படவில்லை. என்ன காரணத்திற்காகவோ இந்த கட்டிடத்தை நல்லூர் ஊராட்சியில் உள்ள அன்னை இந்திரா நினைவு நகர் அருகே தரையில் இருந்து சில அடி பள்ளத்தில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடத்தை கடந்த 2015-ம் ஆண்டு ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த பள்ளியில் தற்போது 39 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு நிரந்தர சத்துணவு கூடம் அமைக்கப்படவில்லை.

இது குறித்து அதிகாரியிடம் கேட்டபோது, ‘அரசிடம் இருந்து சத்துணவு பொருட்கள் வழங்க உத்தரவு வரவில்லை’ என்று தெரிவித்தனர். தற்போது அலமாதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மீதமாகும் உணவை இந்த பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. 6 கி.மீ. தூரத்தில் உள்ள அலமாதியில் இருந்து கொண்டு வருவதால் உணவு பரிமாறுவதில் காலதாமதமாகி மாணவ, மாணவிகள் பசியால் துடித்து சிரமப்படுகிறார்கள்.

இதற்கிடையே பள்ளி கட்டிடம் பள்ளத்தில் கட்டப்பட்டு உள்ளதால், மழைக்காலங்களில் மழைநீர் புகுந்து விடுகிறது. தண்ணீர் வற்றும் வரை பள்ளி திறப்பது இல்லை. வார்தா புயலின்போது பள்ளியை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் அன்னை இந்திராநகர் குடியிருப்புகளும் மூழ்கிவிட்டன. பள்ளத்தில் கட்டப்பட்டதால் மழைநீர் புகுந்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த பள்ளி அருகே ரூ.1 லட்சம் மதிப்பில் 2 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை சரியாக சுத்தம் செய்யாததால் பூட்டி விட்டனர்.

இதனால் மாணவிகள் கழிவறை செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் வைத்து மது அருந்துகிறார்கள். இதுகுறித்து சோழவரம் போலீசில் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, இந்த பள்ளிக்கு நிரந்தரமான சத்துணவு மையம் அமைத்து இங்கேயே சத்துணவு சமைத்து உரிய நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்க வேண்டும். இங்கு பயிலும் குழந்தைகளின் பெற்றோர் அனைவருமே கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருபவர்கள். பள்ளி குழந்தைகளுக்கு மதியம் உணவு கொடுத்து அனுப்ப முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story