கங்கைகொண்டானில் உணவு பூங்கா கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


கங்கைகொண்டானில் உணவு பூங்கா கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 4 April 2018 3:45 AM IST (Updated: 4 April 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

கங்கைகொண்டானில் உணவு பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

நெல்லை, 

மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறையின் மூலம் பிரதம மந்திரியின் கிசான் சம்பாடா என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் விவசாய தொழில் முனைவோர்கள் மானிய உதவி பெற்று பயனடையலாம். 2016- 2020 நிதியாண்டுகளில் இந்திய உணவு பதப்படுத்தும் துறையினால் இந்த திட்டத்துக்கான மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து மானியம் வழங்க உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தையை ஏற்படுத்திடவும், விளைபொருட்களுக்கு உயர்ந்த விலை கிடைத்திட உதவும். மேலும் உணவு பதப்படுத்துதல், விளைபொருட்களுக்கான தொடர் வினியோகம், கிராமப்புறங்களில் மதிப்பு கூடுதல், உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தப்படும்.

வேளாண் விளைபொருட்கள், உணவு பொருட்கள் ஆகியவைகளை நவீன பதப்படுத்தி ஏற்றுமதி செய்து வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மெகா உணவு பூங்காக்கள், ஒருங்கிணைந்த குளிர் பதன கிட்டங்கி மற்றும் மதிப்பு கூடுதல், உணவு பாதுகாப்பு, தரம் உறுதி செய்தல், உணவு பதப்படுத்துதல், சேமித்தல், உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் வருகிற 2020 ஆண்டுக்குள் 10 மெகா உணவு பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உணவு பூங்கா அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டு விரிவாக திட்ட அறிக்கைக்கு சமர்பிக்கப்பட உள்ளது. உணவு பூங்கா அமைத்திட 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதிக பட்சமாக ஒரு திட்டத்துக்கு ரூ.50 கோடி வரை மானியம் வழங்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ.100 கோடி இருக்க வேண்டும்.

குளிர்பதன கிட்டங்கி, மதிப்பு கூட்டுதல் திட்டத்துக்கு அதிகபட்சமாக ரூ.10 கோடியும், உணவு பதப்படுத்தி பாதுகாத்தல், விரிபடுத்துதல் திட்டத்துக்கு ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும். அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள், வேளாண் தொழில் முனைவோர்கள் இந்த திட்டத்தில் பங்கு பெற்று நிதி உதவி பெற முடியும்.

இந்த புதிய திட்டத்தில் இந்தியா முழுவதும் 20 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும் விவரங்களை www.mo-f-pi.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story