சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 300 பேர் கைது


சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 300 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2018 4:00 AM IST (Updated: 4 April 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பூந்தமல்லி ஒன்றியம், நகர தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர்.

இதே போல பூந்தமல்லி நகர தி.மு.க. சார்பில் நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டு டிரங்க் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பூந்தமல்லி போலீசார் மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பூந்தமல்லி, போரூர், காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், வளசரவாக்கம், மதுரவாயல், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன.

Next Story