மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. அதன்படி, நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திலும் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், வி. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும். காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், தமிழக விவசாயிகளின் நலன்களை மத்திய அரசு காத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் கமலகண்ணன், மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு, மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாசலம், நகர செயலாளர் செல்வம் மற்றும் வடக்கு, தெற்கு மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story