காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 4 April 2018 4:15 AM IST (Updated: 4 April 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதன்படி ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன், அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் வந்து திரளாக கலந்து கொண்டனர். இதற்காக அரண்மனை பகுதியில் மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கூறியதாவது:- கடந்த 2007-ல் காவிரி இறுதி தீர்ப்பு வந்தபோது தமிழகத்தில் தி.மு.க.வும் மத்தியில் காங்கிரசும் ஆட்சியில் இருந்தன. அப்போது தி.மு.க.வும், காங்கிரசும் ஒரே கூட்டணியில் இருந்தன. அந்த இறுதி தீர்ப்பினை அரசிதழில் வெளியிட தி.மு.க. உரிய அழுத்தம் கொடுக்கவில்லை.

அதன்பின்பு தமிழக முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா மிக நீண்ட சட்ட போராட்டம் நடத்தி கடந்த 2013-ல் நடுவர் மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட செய்தார். அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த தீர்ப்பின்படி மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. அதனால் மீண்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வலுவான வாதங்களை எடுத்துவைத்து சட்ட போராட்டம் நடத்தியதன் பேரில் தற்போதைய இறுதிதீர்ப்பு கிடைத்துள்ளது.

அந்த தீர்ப்பின்படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மேலாண்மை வாரியம் அமைக்காமல் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. அதேபோல, கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தேர்தல் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழகத்தின் இந்த ஜீவாதார பிரச்சினையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவிற்கு அறிவுரை கூறவோ, தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கவோ முன்வரவில்லை. அ.தி.மு.க.வை பொறுத்த வரை காவிரி விவகாரத்தில் சரியான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது. காவிரி பிரச்சினைக்காக பாராளுமன்றம் 19 நாட்கள் முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. மாநில இளைஞரணி இணை செயலாளர் கீர்த்திகாமுனியசாமி, மாவட்ட அவை தலைவர் செ.முருகேசன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தர்மர், ஆனிமுத்து, சுந்தரபாண்டியன், நகர் செயலாளர் அங்குச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் அசோக்குமார், திருப்புல்லாணி முனியாண்டி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், மாவட்ட பாசறை செயலாளர் பால்பாண்டியன், மாணவரணி செயலாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.பி.நிறைகுளத்தான், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர்கள் சாமிநாதன், நாகநாதசேதுபதி, முன்னாள் தொகுதி இணை செயலாளர் தஞ்சிசுரேஷ்குமார், நகர் துணை செயலாளர் செல்வராணி ரெத்தினம், வக்கீல் பிரிவு செயலாளர் கருணாகரன், மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளர் மருதுபாண்டியன், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணை செயலாளர் சதர்ன்பிரபாகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், முன்னாள் யூனியன் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் நகரசபை தலைவர் ராமமூர்த்தி உள்பட மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story