மதுரையில் குடும்பத் தகராறில் பரிதாபம்: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை


மதுரையில் குடும்பத் தகராறில் பரிதாபம்: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
x
தினத்தந்தி 4 April 2018 4:15 AM IST (Updated: 4 April 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை,

மதுரை பழங்காநத்தம் கணபதிநகர், தெற்குத் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி என்கிற மூர்த்தி, டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா(வயது 25). இவர்களுக்கு மொத்தம் 4 குழந்தைகள்.

கணவரின் வருமானம் குடும்பம் நடத்துவதற்கு போதியதாக இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் பிரியா தெரிந்த ஒருவருக்கு கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். இது மூர்த்திக்கு தெரியவந்ததால், மனைவியை நேற்று கண்டித்தார். பின்பு அவர் வேலைக்குச்சென்று விட்டார். பிரியாவின் மூத்த மகள்கள் இருவரும் பள்ளிக்குச் சென்று விட்டனர்.

வீட்டில் பிரியா தன் மகள் முருகேஸ்வரி(4), மகன் விஜய்கணேஷ் (8 மாதம்) ஆகியோருடன் இருந்தார்.

கணவர் திட்டிய மன வருத்தத்தில் இருந்த அவர் தன் 2 குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு, தானும் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்த மூர்த்தி, மனைவியும், குழந்தைகளும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திலகர்திடல் போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிசெல்வன், சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பிரியாவின் மற்ற 2 குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று விட்டதால் உயிர் தப்பினார்கள். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story