கூட்டுறவு தேர்தல் இறுதிப்பட்டியல் ஒட்ட தாமதம்: வங்கிக்கு பூட்டு போட்டு ஊழியர்கள் சிறை வைப்பு


கூட்டுறவு தேர்தல் இறுதிப்பட்டியல் ஒட்ட தாமதம்: வங்கிக்கு பூட்டு போட்டு ஊழியர்கள் சிறை வைப்பு
x
தினத்தந்தி 3 April 2018 10:45 PM GMT (Updated: 3 April 2018 7:51 PM GMT)

கூட்டுறவு தேர்தல் இறுதிப்பட்டியல் ஒட்ட தாமத மானதால் வங்கிக்கு பூட்டு போட்டு ஊழியர்கள் சிறை வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரையூர்,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து 11 இயக்குனர்கள் பதவிக்கான வேட்புமனு தொடங்கியது. மொத்தம் 41 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பரிசீலனைக்கு பின்னர் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 39 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இறுதி பட்டியல் நேற்று மாலை 5 மணிக்குள் ஒட்டப்பட வேண்டும்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாலை 4 மணி முதல் வங்கியின் ஊழியர்களிடம் கேட்டு உள்ளனர். வங்கியில் உள்ள ஊழியர்கள் பட்டியல் 5 மணிக்கு ஒட்டப்படும் என்று கூறினர்.

ஆனால் 5 மணி ஆகியும் பட்டியல் ஒட்டப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் முருகன் தலைமையில் அந்த கட்சியினர் திடீரென்று வங்கியின் கேட்டிற்கு பூட்டு போட்டனர். வங்கியின் உள்ளே ஊழியர்கள் சிறை வைக்கப்பட்டனர். பின்னர் வங்கியின் முன்பு அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதைதொடர்ந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறுதிப்பட்டியல் ஒட்டப்படும் என்று வங்கி ஊழியர்கள் கூறினர். இதைதொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பூட்டை திறந்தனர். மேலும் 39 பேர் கொண்ட இறுதி பட்டியல் வங்கியின் கதவில் மாலை 5½ மணியளவில் ஒட்டப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story