காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 3 April 2018 11:00 PM GMT (Updated: 3 April 2018 7:51 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் கடைகள் அடைக்கப்பட்டன. வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்தார். அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்திலும் கடைகள் அடைக்கப்பட்டன.

தஞ்சை கீழராஜ வீதி, பழைய பஸ் நிலையம், காந்திஜி சாலை, ரெயில் நிலையம், சரபோஜி மார்க்கெட், கீழவாசல் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதே போல் தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், பூதலூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன. இதே போல் சரபோஜி மார்க்கெட் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. உணவகங்கள், தேநீர் கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. காமராஜர் மார்க்கெட் அடைக்கப்பட்டு இருந்ததால் அங்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இந்த நிலையில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, நகர தலைவர் ஆனந்த், காமராஜர் மார்க்கெட் வியாபாரி சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களும் எழுப்பினர். 

Next Story