காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 4 April 2018 4:30 AM IST (Updated: 4 April 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சிவகாசி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வினர் மாவட்ட தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

சிவகாசி பஸ் நிலையம் அருகில் நடந்த போராட்டத்துக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான முக்கூர் சுப்பிரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதம் காலை 8 மணிக்கு தொடங்கியது. அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து போராடிக் கொண்டு தான் இருக்கும். நாங்கள் யாருக்கும் அடிபணிந்து போவது கிடையாது. மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறோம். தமிழர்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம்.

மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த தி.மு.க. நினைத்திருந்தால் வாரியம் அமைத்திருக்க முடியும். தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் நாடகம் தமிழக மக்களின் மனதில் என்றும் எடுபடாது. காவிரி பிரச்சினையை வைத்து அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க தி.மு.க. சதி திட்டம் போட்டுள்ளது.

மத்திய அரசிற்கு அ.தி.மு.க.வினர் ஜால்ரா அடிக்கின்றனர் என்றும் அடிபணிந்து போகின்றனர் என்றும் நம்மை பார்த்து சிலர் கேலிபேசுகின்றனர். பொய் சொல்கின்றனர். ஆனால் இன்று நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்ற வரலாற்றில் ஒரு பிரச்சினைக்காக 19 நாட்கள் முடக்கப்படுவது இந்த பிரச்சினைக்காக மட்டுமே. இந்தபோராட்டத்தால் மத்திய அரசு திணறிக்கொண்டு இருக்கிறது.

தி.மு.க. சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருகிறது. தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று பாசாங்கு செய்கின்றனர். அ.தி.மு.க. 3-ந்தேதி போராட்டம் அறிவித்த பிறகு தி.மு.க. செயல் தலைவர் 5-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று போட்டிக்காக அறிவித்துள்ளார்.

தமிழர்களின் மானம் காத்த கட்சி அ.தி.மு.க.தான். மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அரசு தொடர்ந்து போராடும். இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்தான். இதுதொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. மகளிர் அணி மாநில நிர்வாகி சக்திகோதண்டம், முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன், மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், அவைத்தலைவர் வக்கீல் விஜயகுமார், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைசெயலாளர் திருத்தங்கல் சீனிவாசன், பொன்சக்திவேல், அசன்பதுருதீன், புதுப்பட்டி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலையில் சிவகாசி நகராட்சி முன்னாள் துணைத் தலைவரும் தொழில் அதிபருமான அரசன் அசோகன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். 

Next Story