காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தி.மு.க.வினர் ‘திடீர்’ சாலைமறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் நேற்று தி.மு.க.வினர் ‘திடீர்’ சாலைமறியலில் ஈடுபட்டனர். முன்னதாக பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் கண்துடைப்பு நாடகம் என்று கூறினார்.
வேலூர்,
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன்சர்க்கிள் பகுதிக்கு சென்றனர். அங்கு ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
கர்நாடக அரசு ஆரம்பம் முதல் இப்போதுவரை காவிரி பிரச்சினையில் ஒரே வக்கீலை ஈடுபடுத்தி வருகிறது. அதனால் அவருக்கு அனைத்தும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் அப்படியில்லை. வழக்கறிஞர்கள் சரியாக இருக்க வேண்டும். அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மறுத்து விட்டார். உடனே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சென்றாவது சந்தித்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் செல்லவில்லை. காரணம் அவருக்கு பதவியும், வருமானமும்தான் முக்கியம். அவருக்கு காவிரியை பற்றி எதுவும் தெரியாது. காவிரி பிரச்சினைக்கு அ.தி.மு.க.தான் காரணம்.
காவிரி பிரச்சினையில் தி.மு.க. என்ன செய்தது என்று கேட்கிறார்கள். கலைஞர் 15 முறை பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார். காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க செய்தார். 75 டி.எம்.சி. தண்ணீரை பெற்றுத்தந்தார். அ.தி.மு.க.விடம் சரியான அணுகுமுறையில்லாததே காவிரி பிரச்சினைக்கு காரணம்.
நாடாளுமன்றத்தை முடக் கும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் அலுவலகம் முன்பு அமர்ந்திருக்க வேண்டும். அ.தி.மு.க. நடத்தும் உண்ணாவிரத போராட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம். தி.மு.க. சார்பில் நாளை (வியாழக்கிழமை) நடக்கும் போராட்டம் வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story