காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி குத்தாலம், சீர்காழியில் கடைகள் அடைப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி குத்தாலம், சீர்காழியில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 3 April 2018 10:45 PM GMT (Updated: 3 April 2018 8:21 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி குத்தாலம், சீர்காழி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குத்தாலம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்து இருந்தார். இதை ஏற்று குத்தாலத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று குத்தாலம் வணிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று குத்தாலத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஆனால், பூக்கடைகள், மருந்துகடைகள், பழக்கடைகள் ஆகியவை மட்டும் திறந்து இருந்தன. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மெயின்ரோடு, ரெயிலடி, பந்தநல்லூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

சீர்காழி

சீர்காழியில் வர்த்தகர் சங்கம், வர்த்தகர் நலசங்கம் ஆகியவை சார்பில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும், சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர். வைத்தீஸ்வரன்கோவில் பகுதியிலும் வர்த்தகர் சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

பொறையாறு, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் வர்த்தகர் சங்கம், வியாபாரிகள் நலசங்கம் ஆகியன சார்பில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. திருக்கடையூரில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். குறிப்பாக அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதிப்பட்டனர்.

இதைப்போல மணல்மேடு, கொள்ளிடம், புதுப்பட்டினம், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலையில் இருந்து மாலை வரை கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

Next Story