மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ரெயில் மறியல் செய்ய முயற்சி 25 பேர் கைது


மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ரெயில் மறியல் செய்ய முயற்சி 25 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2018 4:30 AM IST (Updated: 4 April 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாகையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை நிர்வாக குழு உறுப்பினர் அலாவுதீன் தலைமையில் நேற்று நாகையை அடுத்த புத்தூர் ரெயில்வே கேட்டில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.

வாக்குவாதம்

இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசாரின் தடையை மீறி தண்டவாளத்திற்கு சென்ற விவசாயிகள் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார், ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 25 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story