மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 4 April 2018 4:30 AM IST (Updated: 4 April 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வைத்திலிங்கம் எம்.பி.-அமைச்சர் துரைக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தாத மத்திய அரசை கண்டித்து தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று நடந்தது.

போராட்டத்துக்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி., வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான துரைக்கண்ணு, அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜ், பால்வள தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, வக்கீல் சரவணன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்ணாவிரத போராட்டத்துக்காக பந்தலும் அமைக்கப்பட்டு இருந்தது. போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி யது. காலையில் கூட்டம் குறைவாக இருந்தாலும் நேரம், ஆக, ஆக உண்ணாவிரத பந்தல் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன்களில் தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர். மாலை 5 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்தது. இதில் மாவட்ட இணை செயலாளர் சாவித்திரி கோபால், மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ரெத்தினசாமி, ராம.ராமநாதன், ராம்குமார், இளமதி சுப்பிரமணியன், கும்பகோணம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ரத்னா சேகர் மற்றும் ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், “காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிடவில்லை. அப்போது மத்தியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு இருந்தது. இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் 19-2-2013 அன்று வெளியிடச்செய்தார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பை வழங்கி உள்ளது. அதில் ‘ஸ்கீம்’ என்றால் காவிரி மேலாண்மை வாரியம் உள்பட அனைத்தும் தான். ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதை கண்டித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி உதவிகள் பெற மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம். அதேபோல் தமிழக நலனை பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டால் மத்திய அரசை எதிர்க்கவும் தயாராக உள்ளோம்” என்றார்.


Next Story