மலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட பெண் திருச்சிக்கு மீட்டு கொண்டுவரப்பட்டார்


மலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட பெண் திருச்சிக்கு மீட்டு கொண்டுவரப்பட்டார்
x
தினத்தந்தி 4 April 2018 4:15 AM IST (Updated: 4 April 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

மலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட பெண் திருச்சிக்கு மீட்டு கொண்டுவரப்பட்டார். அப்போது, விமானநிலையத்தில் அவர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

செம்பட்டு,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கம் உள்ள செங்கமரக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் பானுப்பிரியா (வயது25). 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவரை இழந்த பானுப்பிரியா பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு அவருக்கு ஒரு பெண் அறிமுகமானார். அந்த பெண் மலேசியாவில் ஓட்டல் வேலைக்கு என பானுப்பிரியாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைத்தார். ஆனால் மலேசியாவில் பானுப்பிரியாவுக்கு ஓட்டல் வேலை எதுவும் வழங்கப்படவில்லை.

பாலியல் தொழில் செய்வதற்காக சீனாவை சேர்ந்த ஒருவரிடம் விற்கப்பட்டு இருக்கிறார். அவரிடம் இருந்து எப்படியோ தப்பித்த பானுப்பிரியா இந்திய தூதரகத்தில் புகார் செய்து தனக்கு உதவி கேட்டு தஞ்சம் அடைந்தார். மேலும் அங்கு தனக்கு நடந்து வரும் சித்ரவதைகள் பற்றி பட்டுக்கோட்டையில் உள்ள தனது தாயார் பங்கஜவல்லிக்கும் தகவல் அனுப்பினார். பங்கஜவல்லி தனது மகளை மீட்டு தரும்படி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். இதனை தொடர்ந்து மலேசிய தமிழர்கள் மற்றும் சில அமைப்புகளின் உதவியுடன் மீட்கப்பட்ட பானுப்பிரியா தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மலேசியாவில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் திருச்சிக்கு வந்த பானுப்பிரியா விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த கண்ணீர் பேட்டியில் கூறியதாவது:-

பட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண் என்னை மகள் போல் நடத்தினார். அவர் ஓட்டல் வேலைக்கு என என்னை மலேசியாவிற்கு அனுப்பி வைத்தார். நானும் அவரை நம்பினேன். ஆனால் மலேசியாவிற்கு சென்றதும் என்னை ஒரு சீனாகாரனிடம் அந்த பெண் 6 ஆயிரம் வெள்ளிக்கு பாலியல் தொழில் செய்வதற்கு விற்று விட்டார். நான் அவரிடம் இருந்து தப்பி இந்திய தூதரகத்தில் புகார் செய்தேன். மலேசியாவில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரமுகர் ஒருவர் நான் தமிழகத்திற்கு திரும்பி வர உதவி செய்தார். என்னை போல் பல பெண்கள் மலேசியாவில் விபசாரத்திற்காக விற்கப்பட்டு உள்ளனர். மலேசியாவில் 5 மாத காலம் நான் பல வேதனைகளை அனுபவித்து உள்ளேன். இதற்கு காரணமான அந்த பெண் மீது விரைவில் போலீசில் புகார் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி வந்து சேர்ந்த பானுப்பிரியாவை எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் கார் மூலம் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

1 More update

Next Story