காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 April 2018 4:15 AM IST (Updated: 4 April 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகே தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜ், கலை, ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ராஜா, ஸ்ரீதர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அருள், பார்வர்டு பிளாக் வெங்கடேசன், திராவிடர் கழகம் ஆரோக்கியராஜ், சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தால் மத்திய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா தலைமையில் நிர்வாகிகள் அஷ்ரப்அலி, ரபீக், ஷேக்தாவூத், பஷீர், சதாம் உள்பட ஏராளமானோர் நேற்று காலை ரெயில் மறியலில் ஈடுபட திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஊர்வலமாக வந்து ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

இது பற்றி ஏற்கனவே அறிந்து அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மத்திய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய இரும்பு வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிமுத்துராஜா தலைமை தாங்கினார். வணிகர் சங்க பேரவை மாவட்ட செயலாளர் மாரி என்கிற பத்மநாபன், காந்திமார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திருச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து வக்கீல் சங்க தலைவர் பன்னீர் செல்வன் தலைமையில் அவர்கள் கோர்ட்டு நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 

Next Story