எடியூரப்பா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் சேத்தன் வலியுறுத்தல்


எடியூரப்பா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் சேத்தன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 April 2018 8:59 PM GMT (Updated: 3 April 2018 8:59 PM GMT)

எடியூரப்பா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் சேத்தன் வலியுறுத்தினார். நடிகர் சேத்தன் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பெங்களூரு,

காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா மற்றும் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் குற்றப்பத்திரிகையை வெளியிட்டனர். அதில் திட்டள்ளி போராட்டம் நக்சலைட்டுகளின் ஆதரவால் நடத்தப்பட்ட போராட்டம் என்று கூறப்பட்டுள்ளது. இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டள்ளி போராட்டம் பற்றிய கருத்தை பா.ஜனதா வாபஸ் பெற வேண்டும். இதற்காக எடியூரப்பா, மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லாவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். கடந்த ஆண்டு(2017) டிசம்பர் மாதம் 3 ஆயிரம் ஆதிவாசி மக்களை திரட்டி அவர்களின் உரிமைக்காக போராட்டம் நடத்தப்பட்டது. இது சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்பட்டது. மகாத்மா காந்தி, அம்பேத்கரை போலவே அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினோம்.

அந்த போராட்டத்தின் விளைவாக மாநில அரசு அந்த மக்களுக்கு 528 வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. மேலும் ஆயிரம் வீடுகளை கட்டி கொடுப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது. ஆதிவாசிகள், தலித்துகள் நடத்தும் போராட்டத்தை பா.ஜனதா கொச்சைப்படுத்துகிறது. தவறான குற்றச்சாட்டுகளை கூறி பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அத்தகைய மக்களை கைது செய்கிறார்கள்.

என்னை நக்சலைட்டு என்று பா.ஜனதாவை சேர்ந்த பிரதாப் சிம்ஹா கூறுகிறார். மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். அவருக்கு எதிராக நான் தேர்தல் பிரசாரம் செய்வேன். எக்காரணம் கொண்டும் அவர் வெற்றி பெறக்கூடாது. பா.ஜனதா எப்போதும் பணக்காரர்கள், பெரிய தொழில் நிறுவனங்களின் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

இவ்வாறு நடிகர் சேத்தன் கூறினார்.


Next Story