காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சியினர் 3-வது நாளாக சாலை மறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சியினர் 3-வது நாளாக சாலை மறியல்
x
தினத்தந்தி 4 April 2018 4:00 AM IST (Updated: 4 April 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மாவட்டம் முழுவதும் நேற்று 3-வது நாளாக தி.மு.க.- கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.எல்.ஏ. உள்பட 625 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், வாரியத்தை உடனடியாக அமைக்க கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் அரசியல் கட்சியினரும், பொது அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

கடலூர் உழவர் சந்தை அருகில் தி.மு.க. நகர செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு நின்றனர். பின்னர் கட்சி கொடிகளை கையில் பிடித்துக்கொண்டு கோஷம் எழுப்பியபடி அண்ணாபாலம் நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, காங்கிரஸ் கட்சியின் மாநில சொத்து மீட்பு குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், மாவட்ட மாணவர்அணி அமைப்பாளர் நடராஜன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, தொ.மு.ச. தலைவர் பழனிவேல், மாணவர்அணி அகஸ்டின் பிரபாகரன் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நகர செயலாளர் அமர்நாத் தலைமையில் கடலூர் அண்ணாபாலம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன், ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் தமிழ்மணி, நகர குழு உறுப்பினர் ஏழுமலை, ஒன்றிய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர்.

புவனகிரி தி.மு.க. தொகுதி சார்பில் கீரப்பாளையம் மெயின்ரோட்டில் தி.மு.க., திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று திரண்டனர். பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு, புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை கி.சரவணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக துரை கி.சரவணன் எம்.எல்.ஏ. உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புவனகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய செயலாளர் சதானந்தம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சிதம்பரம் நகர போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். இதில் மொத்தம் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

தி.மு.க. சார்பில் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சிதம்பரம் தெற்கு வீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் காட்டுமன்னார்கோவில் பஸ்நிலையம் அருகில் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, வட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர். குறிஞ்சிப்பாடி சாவடி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் தண்டபாணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாநில பேச்சாளர் மன்சூர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர். ஆக மொத்தம் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 625 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story