பருவாச்சி கூட்டுறவு கடன் சங்க தேர்தல்: ஓட்டு எண்ணும்போது வாக்கு சீட்டுகளை கிழித்து எறிந்ததால் சாலைமறியல்


பருவாச்சி கூட்டுறவு கடன் சங்க தேர்தல்: ஓட்டு எண்ணும்போது வாக்கு சீட்டுகளை கிழித்து எறிந்ததால் சாலைமறியல்
x
தினத்தந்தி 3 April 2018 11:10 PM GMT (Updated: 3 April 2018 11:10 PM GMT)

பருவாச்சி கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் ஓட்டு எண்ணும்போது வாக்குச்சீட்டுகள் கிழித்து எறியப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள பருவாச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கான தேர்தல் நடத்த கடந்த 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. என 3 அணிகளாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. 587 ஆண் உறுப்பினர்கள், 312 பெண் உறுப்பினர்கள் என 899 பேர் ஓட்டுப்போட்டனர்.

இந்த ஓட்டுகள் நேற்று காலை கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஒரு அறையில் எண்ணப்பட்டது. தேர்தல் அதிகாரி சத்தியமங்கலம் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் (பொதுவினியோகம் திட்டம்) சண்முகம் தலைமையில் வாக்குகள் எண்ணப்பட்டது.

சுமார் 700 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அ.தி.மு.க. ஆதரவுடைய ஒருபிரிவினர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைக்குள் நுழைந்து வாக்கு சீட்டுகளை கிழித்தும், ஆவணங்களை பறித்தும் எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற 2 அணியினர் உடனே கூட்டுறவு சங்கத்துக்கு அருகில் செல்லும் அந்தியூர்-பவானி மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

மேலும் நியாயமான முறையில் மீண்டும் தேர்தலை நடத்தவேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதற்கிடையே தகவல் கிடைத்து போலீசாரும், ஈரோட்டில் இருந்து ஆயுதப்படை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டார்கள். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இந்தநிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் நேற்று இரவு தேர்தல் அதிகாரி சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தேர்தலை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நொச்சிக்குட்டை நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் நடந்த வேட்புமனு பரிசீலனையில் அ.தி.மு.க.வை சேர்ந்த 12 பேரின் வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டது. மற்றவர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதுபற்றி அறிந்ததும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு வந்து நொச்சிக்குட்டை கூட்டுறவு சங்க அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சங்க தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Next Story