மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் சேலம் மாநகர போலீசாருக்கு திருமண நாளில் விடுமுறை அளிக்க திட்டம்


மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் சேலம் மாநகர போலீசாருக்கு திருமண நாளில் விடுமுறை அளிக்க திட்டம்
x
தினத்தந்தி 4 April 2018 5:08 AM IST (Updated: 4 April 2018 5:08 AM IST)
t-max-icont-min-icon

மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் சேலம் மாநகர போலீசாருக்கு, திருமண நாளில் விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம், 

காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு பணி நேரம் என்பது கிடையாது. எப்போது அழைத்தாலும் பணிக்கு வரவேண்டிய கட்டாயம் உள்ளது. அதில் முக்கிய பிரமுகர் வருகை, பண்டிகை மற்றும் திருவிழா நாட்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பொறுப்பும் கடமையும் போலீசாருக்கு உள்ளது.

இதனால், போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை கழிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. போலீசார் பலர், மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவமும் தற்போது அதிகரித்து வருகிறது. மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி அளித்தாலும் விடுமுறை இல்லாவிட்டால் மன அழுத்தத்தை எப்படி போக்க முடியும்?. மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளின் தொந்தரவும் காவலர்கள் சிலரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது. ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் சிலரும், அவர்களுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டு கடமையை சரிவர செய்யவும் தவறி விடுகிறார்கள்.

இந்த நிலையில் சேலம் மாநகர காவல்துறை, மாநகர ஆயுதப்படை, மாநகர போலீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் அமெச்சுப்பணியாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களது மன அழுத்தத்தை போக்கிட சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் திட்டம் ஒன்றை ஆலோசித்து அதை நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளார். அத்திட்டம், மாநகர போலீசில் பணியாற்றும் போலீஸ்காரர்கள், ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும், அவர்களது திருமண நாளன்று விடுமுறை அளித்து குடும்பத்துடன் ஆனந்தமாக பொழுதை கழிக்க அனுமதிப்பதாகும். போலீஸ் கமிஷனர் சங்கரின் இத்திட்டமானது காவல்துறையினரிடையே உற்சாகத்தையும், மகிழ்ச்சியும் அளித்துள்ளது.

இத்திட்டம் இன்று(புதன்கிழமை) முதல் அமல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் யார் யாருக்கெல்லாம் எந்தெந்த தேதியில் திருமணநாள் என்ற பெயர் பட்டியல் சேகரிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

Next Story