பலாத்கார முயற்சியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம்: சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா போராட்டம்
பலாத்கார முயற்சியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இந்த சிறுமி அந்த கிராமத்துக்கு வரும் சாலையோரம் முட்புதரில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தாள். போலீஸ் விசாரணையில் பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பரதூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பால அறவாழி தலைமையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்தினை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க காலை 10.30 மணிக்கு வந்தனர்.
அப்போது அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராஜேந்திரன் இல்லை. இதையடுத்து அவர்கள், அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறுமியை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து மதியம் 12.30 மணி வரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், இந்த பிரச்சினை தொடர்பாக கடலூரில் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பது என்று முடிவு செய்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர்கள் சிதம்பரம் செல்லப்பன், கடலூர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story