மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் சாலைமறியல்-ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் சாலைமறியல்-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 3:30 AM IST (Updated: 4 April 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.-கூட்டணி கட்சியினர் சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியினர் மாடூரில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர்.

விழுப்புரம், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது.

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட நகர தி.மு.க. செயலாளர் சுப்புராயலு உள்பட 59 பேரை போலீசார் கைது செய்தனர்.

கெடிலத்தில் திருநாவலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வசந்தவேல் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 42 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர திருக்கோவிலூர் எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையிலும், விக்கிரவாண்டி தபால் நிலையம் அருகில் ராதாமணி எம்.எல்.ஏ. தலைமையிலும், கண்டமங்கலத்தில் தி.மு.க. விவசாய அணி நிர்வாகி சீனுசெல்வராஜ் தலைமையிலும், ரிஷிவந்தியத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமையிலும் தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செஞ்சி மேலச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க. நிர்வாகி தமிழன் சீனுவாசன் தலைமையிலும், வளத்தி பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொன்னுரங்கம் தலைமையிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தியாகதுருகம் அருகே மாடூரில் உள்ள சுங்கச்சாவடியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதில் அக்கட்சியின் நகர செயலாளர் ஜீவானந்தம் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

சங்கராபுரத்தில் தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழக மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை உள்ளிட்ட 35 பேரை சங்கராபுரம் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

கோட்டக்குப்பத்தில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் அதன் நகர செயலாளர் முகம்மது தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீல்கள் அனைவரும் காவிரி பிரச்சினைக்காக நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். இதில் வக்கீல் சங்க தலைவர்கள் ராஜாராம், சுப்புராயலு, வக்கீல்கள் சங்கரன், ராஜேஷ், ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் வக்கீல் சங்க தலைவர் சின்னத்தம்பி தலைமையில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story