கல்வராயன்மலையில் மலைவாழ் மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கல்வராயன்மலையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மலைவாழ் மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 1½ லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள், பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வனத்துறை சார்பில் வன உரிமை சட்டத்தின் படி 200 பேருக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை, வனத்துறை, வேளாண்துறை, மதுவிலக்கு, அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கல்வராயன்மலையில் உள்ள கரியாலூர் கோடை விழா அரங்கத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா தலைமை தாங்கினார். கலெக்டர் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலைவாழ் மக்கள் 200 பேருக்கு பட்டா, சாராயம் காய்ச்சி திருந்திய 30-க்கும் மேற்பட்டோருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் கறவை மாடுகள், தாட்கோ திட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்னதம்பி, கிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், விழா அரங்கத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மேடை அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்களுக்கு வனத்துறை சார்பில் வழங்கப்படும் பட்டா வேண்டாம், வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கலெக்டர் சுப்பிரமணியன் போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மலைவாழ் மக்கள், சுமார் ரூ.50 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் பல கிராமங்களை இணைக்கும் வகையில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் எங்கள் பகுதியில் இருந்து கர்ப்பிணிகள், நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையத்துக்கு செல்லமுடியாமல் கடும் அவதியடைகிறோம். எனவே பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும், வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்க வேண்டும் என்றனர்.
பின்னர் கலெக்டர் சுப்பிரமணியன் பேசுகையில், வனத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சாலை பணிகளை மீண்டும் சட்ட ரீதியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வனத்துறையினர் சார்பில் இனி வழங்கப்பட உள்ள பட்டாக்களை மாற்றி, வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்க அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் விழுப்புரம் மதுவிலக்கு கலால் பிரிவு சார்பில் சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் ராஜேந்திரன், மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ரஞ்சினி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, சின்னசேலம் தாசில்தார் வெங்கடேசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் இந்திரா, மதுவிலக்கு கலால் ஆயத்துறை தனி தாசில்தார் பாண்டியன், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, மாவட்ட மருத்துவர் நேரு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story