மரக்காணம் அருகே மினி லாரி மோதியதில் வக்கீல் குமாஸ்தா உள்பட 2 பேர் பலி


மரக்காணம் அருகே மினி லாரி மோதியதில் வக்கீல் குமாஸ்தா உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 4 April 2018 10:15 PM GMT (Updated: 4 April 2018 6:40 PM GMT)

மரக்காணம் அருகே மினிலாரி மோதியதில் வக்கீல் குமாஸ்தா உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மரக்காணம், 

காஞ்சீபுரம் மாவட்டம் கப்பிவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் குமாஸ்தா வேதகிரி(வயது45). இவரது மைத்துனர் சேகர்(56). இவர் உப்பு வேலூரைச்சேர்ந்தவர், மரம் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் இவர்கள் இருவரும் ஒரு ஸ்கூட்டரில் கப்பிவாக்கத்தில் இருந்து மரக்காணத்துக்கு சென்றனர். அங்கு மர வியாபாரத்தை முடித்துக்கொண்டு ஸ்கூட்டரில் கப்பிவாக் கத்துக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். தாழங்காடு மேம்பாலத்தை கடந்து செல்லும் போது, எதிரில் வந்த மினிலாரி அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். ஆனால் இந்த விபத்தை ஏற்படுத்திய மினிலாரி நிற்காமல் சென்று விட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேதகிரியின் அண்ணன் நற்குணம் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மினிலாரி டிரைவரை தேடி வருகிறார்.

Next Story