வந்தவாசியில் பட்டறை உரிமையாளரின் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.43 ஆயிரம் மோசடி


வந்தவாசியில் பட்டறை உரிமையாளரின் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.43 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 4 April 2018 10:30 PM GMT (Updated: 4 April 2018 7:53 PM GMT)

பட்டறை உரிமையாளரின் ஏ.டி.எம்.கார்டை திருடி ரூ.43 ஆயிரத்தை வங்கிக்கணக்கிலிருந்து மோசடி செய்த முன்னாள் தொழிலாளி கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

வந்தவாசி, 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுனை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). சேத்துப்பட்டு சாலையில் லாரி மற்றும் மினி லாரிகளுக்கு பாடி கட்டும் பட்டறை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் வந்தவாசி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாரத் (20) என்பவர் வேலை செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டாராம்.

ஆனாலும் இந்த பட்டறைக்கு அடிக்கடி அவர் வந்து செல்வது வழக்கம். அப்போது பட்டறை உரிமையாளரின் டிராவில் ஏ.டி.எம். கார்டு வைக்கப்பட்டுள்ளதையும், டைரியில் குறித்து வைக்கப்பட்டிருந்த ரகசிய எண்ணையும் ஏற்கனவே அவர் அறிந்து வைத்திருந்தார். பாரத் அந்த ஏ.டி.எம். கார்டை எடுத்து சென்று பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் ஏ.டி.எம். கார்டை டிராவில் வைத்துவிட்டு சென்று விடுவாராம். ஏற்கனவே வேலையில் இருந்த போதும் இதுபோன்று செய்து வந்துள்ளார்.

இதை அறியாத சரவணன் கடந்த வாரம் பணம் எடுக்க வங்கிக்கு சென்றபோது தனது கணக்கில் பணம் இல்லை என்ற தகவல் தெரிந்தது. இதனால் சரவணன் வங்கி மேலாளரிடம் இதுபற்றி புகார் தெரிவித்தார். மேலும் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஏ.டி.எம். கார்டை அவ்வப்போது பயன்படுத்தி பாரத் ரூ.43 ஆயிரத்து 700-ஐ எடுத்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பாரத்தை போலீசார் கைது செய்தனர்.

Next Story