டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி நாள் விழா: இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணன் பேச்சு


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி நாள் விழா: இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2018 10:30 PM GMT (Updated: 4 April 2018 8:32 PM GMT)

“நேர்மறையான எண்ணங்களுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம்” என்று டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்த கல்லூரி நாள் விழாவில் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணன் பேசினார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஒய்ஸ்லின் ஜிஜி ஆண்டறிக்கை வாசித்தார்.

திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

தென் இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி திகழ்கிறது. இந்த கல்லூரி நாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். மாணவர்கள் எளிமையை கடைபிடித்தும், நேர்மறையான எண்ணங்களுடனும் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம். பழங்கால வானியலாளரும், கணிதவியலாளருமான ஆர்யபட்டா மற்றும் விஞ்ஞானிகள் ஹோமிபாபா, விக்ரம் சாராபாய் போன்றோர்கள் தொலைநோக்கு பார்வையுடன் நமது நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்த நினைத்தாலும், அதனை நிறைவேற்றும் வரையிலும், அதனைப் பற்றியே சிந்தித்து திட்டமிட்டு செயல்படுத்தினால் வெற்றி பெறலாம். இளைஞர்கள் வைராக்கியத்தில் சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சிநாதனாகவும், துணிச்சலில் பகத்சிங்காகவும், தலைமை பண்பில் சத்ரபதி சிவாஜியாகவும் இருக்க வேண்டும். மாணவர்கள் வாழ்வில் சிறந்த வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.

பின்னர் கல்லூரி ஆண்டு மலரை கல்லூரி செயலாளர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டார். அதனை திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணன் பெற்று கொண்டார். பின்னர் அவர், அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

கல்லூரி அளவில் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்ட பரத்வாஜிக்கு (பி.டெக். இறுதி ஆண்டு) தங்க பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு வெள்ளி பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. சிவந்தி வினாடி- வினா போட்டியில் முதலிடம் பிடித்த நெல்லை ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் பொன் விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. பின்னர் மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Next Story