சென்னை புளியந்தோப்பில் பொது கழிவறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


சென்னை புளியந்தோப்பில் பொது கழிவறையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 April 2018 3:00 AM IST (Updated: 5 April 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புளியந்தோப்பில் உள்ள பொது கழிவறையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் சாலையில் இலவச பொது கழிவறை உள்ளது. ஆண்கள், பெண்களுக்கு என்று தனித்தனியாக உள்ள இந்த கழிவறையை அதை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட தெருக்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இதன் அருகில் உள்ள சென்னை கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களும் இந்த கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர்.

சுமார் 20 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வரும் இந்த கழிவறை சரிவர பராமரிக்கப்படாமலும், தண்ணீர் சரியாக வராததாலும் பெரும்பாலும் மூடியே கிடக்கிறது.

வருடத்துக்கு ஒருமுறை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வந்து இந்த கழிவறையை பார்வையிட்டு பெயிண்டு அடித்து சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டாலும், அதன்பிறகு முறையாக தண்ணீர் வராததால் பயன்பாடு இன்றி மூடியே கிடக்கிறது. இதனால் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கென அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் இறைக்கும் மோட்டார் சரிசெய்யப்பட்டு தண்ணீர் கொண்டு வரப்பட்டாலும், அதில் கழிவுநீர் கலந்து வருவதால் அதை பயன்படுத்தினால் தொற்றுநோய் வருமோ? என்ற அச்சத்தில் கழிவறையை பயன்படுத்த தயங்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வேறு வழியின்றி இயற்கை உபாதைகளை கழிக்க அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்துக்கு சென்று திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பொது கழிவறையை மீண்டும் சீரமைத்து முறையாக தண்ணீர் வர வழிவகை செய்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வருபவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Related Tags :
Next Story