கோவை மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க நடவடிக்கை


கோவை மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 5 April 2018 3:45 AM IST (Updated: 5 April 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு நடை பெறுவதையொட்டி போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும், ஆட்டோக்கள் ஓடாது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

கோவை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முழு அடைப்பு நடைபெறும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதற்கு பல்வேறு வர்த்தக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள முழு அடைப்பை எதிர்நோக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின் கோவை நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நகரின் முக்கிய பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. கோவை ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அங்கு வரும் பயணி களின் உடமைகளை தீவிர சோதனை செய்த பின்னரே அவர்களை உள்ளே அனுமதித்தனர்.

இதேபோல் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின்பேரில் சூலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கோவை நகரம் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடைகளை அடைக்கச் சொல்லி யாரையும் வற்புறுத்தக்கூடாது. அவ்வாறு வற்புறுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஆயிரத்து 75 அரசு பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அதில் வெளியூர் பஸ்கள் 353. டவுன் பஸ்கள் 722. இன்று நடக்கும் முழு அடைப்பில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. எச்.எம்.எஸ்., பணியாளர் சம்மேளனம், விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கு கொள்ளும் என்பதால் அவற்றை சார்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைக்கு வர மாட்டார்கள். ஆனால் ஆளும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலைக்கு வருவார்கள். அவர்கள் பஸ்களை இயக்குவார்கள்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தொழிற்சங்க பிரமுகர் ஒருவர் கூறுகையில், மொத்த அரசு பஸ்களில் 60 முதல் 70 சதவீத பஸ்கள் ஓடாது. ஆனால் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தினரை கொண்டு பஸ்களை இயக்குவார்கள். எனவே மீதி 30 சதவீத பஸ்கள் ஓடும்’ என்றார்.

இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அரசு பஸ்களை முழு அளவில் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும்’ என்றார்.

கோவையில் உள்ள தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘கோவையில் தனியார் பஸ்கள் ஓடும். அரசு நிர்வாகம் பஸ்களை இயக்க சொல்வதால் இன்று நாங்கள் பஸ்களை ஓட்டுவோம்’ என்றார்.

லாரி உரிமையாளர்கள் கூறுகையில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கிறோம். இந்த போராட்டக் களத்தை அனைவரும் ஒருங்கிணைந்து வலுப்படுத்த வேண்டும். முழுஅடைப்பையொட்டி நிலைமையை பார்த்து லாரியை இயக்குவதா? வேண்டாமா? என்பது முடிவு செய்யப்படும்’ என்றனர்.

அனைத்து ஆட்டோ சங்க கூட்டு கமிட்டி தலைவர் பி.கே.சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முழு அடைப்பிற்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில் போராட்டத்தில் பங்கேற்கும் விதமாக இன்று(வியாழக்கிழமை) அனைத்து ஆட்டோக்களும் ஓடாது’ என்று தெரிவித்துள்ளார். இதே போல டெம்போ வேன், கார்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் கூறுகையில், ‘முழு அடைப்பையொட்டி 4 மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் காலை 10 மணி காட்சி, பகல் 2 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. சில திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பப்பட்டால் மாலை காட்சியையும் ரத்து செய்வார்கள்’ என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மாவட்டத் தலைவர் ஜி.இருதயராஜா, செயலாளர் ஆர்.எஸ். கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்ற காரணத்தினாலும் தொடர் போராட்டங்களால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதாலும் பொதுமக்களின் நலன் கருதி இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலான வணிகர்கள், தங்களது வணிக நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைக்க விரும்புகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் நடத்துகின்ற போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு அளிக்கிறோம். அதே நேரம் வணிகர்களின் கருத்தையும் ஏற்றுக் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி இன்று வழக்கம் போல வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல் படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள காய்கறி கடைகள் இன்று திறந்திருக்கும் என்று தெரிகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘விவசாயிகளின் நலனுக்காக நடக்கும் இந்த முழு அடைப்பிற்கு வியாபாரிகள் ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகள் வீணாகி விடும் என்பதால் அவற்றை வியாபாரிகள் வாங்கிக் கொள்வார்கள். எனவே கடைகள் திறந்திருக்கும்’ என்றனர்.

கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் வழக்கம் போல செயல்படும் என்று தெரிகிறது. 

Next Story