தலைமை தபால் அலுவலகத்துக்கு பூட்டுப்போட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது


தலைமை தபால் அலுவலகத்துக்கு பூட்டுப்போட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 4 April 2018 11:15 PM GMT (Updated: 4 April 2018 9:19 PM GMT)

ராமநாதபுரத்தில் நாம்தமிழர் கட்சியினர் தலைமை தபால் அலுவலகத்துக்கு பூட்டுபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ராமநாதபுரம் மாவட்ட நாம்தமிழர் கட்சியினர் நேற்று காலை ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகத்திற்குள் சென்றனர். தொகுதி பொறுப்பாளர் வெங்குளம் ராஜு, மாவட்ட தலைவர் நாகூர்கனி உள்ளிட்டோர் தபால் அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உள்ளே உள்ளவர்கள் வெளியே வரமுடியாமலும், வெளியே உள்ளவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

அப்போது நாம் தமிழர் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷமிட்டதோடு, மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். போலீசாருக்கு தெரியாமல் கட்சி கொடி உள்ளிட்டவைகளை மறைத்து கொண்டு பொதுமக்கள் போல சென்று திடீரென்று இவ்வாறு செயல்பட்டதால் தபால் அலுவலக பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் தபால் அலுவலக பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை அழித்தனர். இதுபற்றி அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பூட்டினை திறக்க நாம் தமிழர் கட்சியினரிடம் கூறினர்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கதவை திறக்க முடியாது என்று கூறியதால் வேறுவழியின்றி போலீசார் பூட்டை உடைத்தனர். தபால் நிலையத்திற்கு பூட்டுபோட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம்தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்ய அழைத்து செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம்தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story