முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி


முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 5 April 2018 4:00 AM IST (Updated: 5 April 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்.

சிங்கம்புணரி,

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செ.மாதவன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் மரணமடைந் தார். 4 முறை எம்.எல்.ஏ.யாக இருந்துள்ள அவர், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க. பொருளாளராகவும் பணியாற்றியுள்ள மாதவன், அண்ணா, கருணாநிதி அமைச்சரவைகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவையொட்டி தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்பினரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மாதவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த வருவதாக கூறியிருந்தார். அதன்படி நேற்று காலை மு.க.ஸ்டாலின் சிங்கம்புணரி வந்தார். பின்னர் அவர் கட்சியினருடன் சென்று மாதவன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சுப.தங்கவேலன், ஜெகத்ரட்சகன், சுப.துரைராஜ், மதியரசன், சாத்தூர் ராமச்சந்திரன்., சுப்புலட்சுமி ஜெகதீசன், அ.ராஜா, கே.என்.நேரு, திண்டுக்கல் ஐ.லியோனி, மதுரை கோ.தளபதி ஆகியோர் செலுத்தினர்.

மேலும் அ.தி.மு.க. சார்பில் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, ம.தி.மு.க. சார்பில் புலவர் செவந்தியப்பன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், மாரியப்பன் கென்னடி, கே.கே.உமாதேவன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம் மற்றும் பல்வேறு கட்சியினர், தொழில் அதிபர்கள் மற்றும் சிங்கம்புணரி பொதுமக்கள் மாதவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாதவனின் உடல் அடக்கம் வேங்கைப்பட்டி சாலையில் உள்ள பொது மயானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக சிங்கம்புணரி அண்ணா மன்றம் அருகில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக உடல் கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலின், பெரியகருப்பன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர். மாதவனின் வீட்டில் இருந்து பொது மயானம் உள்ள 1 கி.மீ. தூரம் வரை இறுதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மயானத்தில் மாதவனின் அடக்கம் நடைபெற்றது.

செ.மாதவனின் மறைவையொட்டி சிங்கம்புணரி நகரில் வணிகர் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. 

Next Story