மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 4:30 AM IST (Updated: 5 April 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை அருகே மின்சாரம் தாக்கி இறந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து கரூரில் அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கரும்புலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்(வயது47). இவர் மின்வாரிய வயர்மேன்களுக்கு உதவியாக கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் பாண்டியன் நேற்று முன்தினம் குஜிலியம்பாறை அருகே லந்தகோட்டையில் மின்சார வயர் பராமரிப்பு வேலைக்கு சென்றார்.

பணியின்போது மின்சாரம் தாக்கியதையடுத்து பாண்டியன் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் விரைந்து வந்து பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனை முடிந்ததும் பாண்டியனின் உடலை வாங்க உறவினர்கள், அந்த ஊர் பொதுமக்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் குஜிலியம்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், “லந்தகோட்டையில் பாண்டியன் எப்படி இறந்தார் என்பது குறித்து கேட்பதற்காக அவருடைய உறவினர்களும், ஊர் பொதுமக்களும் சென்றனர்.

அப்போது கருப்பண்ண கோவில் பூசாரியை சேர்ந்த தரப்பினர் எங்கள் மீது கல்வீசி தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. நள்ளிரவில் எங்கள் ஊரை சேர்ந்த 27 பேரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். கைதானவர்களை விடுவிக்க வேண்டும். அந்த கோவில் பூசாரி இங்கு வர வேண்டும். மின்சார இணைப்பை துண்டித்து விட்டு பணி செய்தபோது கோவிலில் ஜெனரேட்டரை இயக்கியதால் தான் மின்சாரம் பாய்ந்து பாண்டியன் இறந்தார்” என்றனர். மேலும் சிலர் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பிரேத பரிசோதனை கூடம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இறந்த பாண்டியனின் உடலை வாங்க மறுத்தவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முதலில் உடலை பெற்று செல்லும் படியும் அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் கூறினர். இதைத்தொடர்ந்து சமாதானமடைந்த பொதுமக்கள், இறந்த பாண்டியனின் உடலை பெற்று சென்றனர். 

Next Story