விவசாயிகள் நலத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - கலெக்டர் லதா அறிவுறுத்தல்


விவசாயிகள் நலத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - கலெக்டர் லதா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 5 April 2018 3:15 AM IST (Updated: 5 April 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் தங்கள் பகுதிகளுக்கு ஏற்ற விவசாயத்தை தேர்வு செய்து அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் லதா கூறினார்.

சிவகங்கை,

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் வேளாண்மைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உத்தமனூர் பகுதியில் தோட்டக்கலைத்துறையின் மூலம் மானிய திட்டத்தில் அடர் நடவு முறையில் மா மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட அவர், அதன் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இதேபோல் மேலநெட்டூர், ஆலம்பச்சேரி, குறிச்சி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் இளையான்குடி வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் 2 டிராக்டர்களையும், 5 பயனாளிகளுக்கு மண்வள பாதுகாப்பு அட்டையையும் கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் லதா விவசாயியிடம் கூறும்போது, “விவசாயிகளுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகள் வேளாண்மைத்துறையின் மூலம் செய்து கொடுக்கப்படும்.

விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, பொறியியல் துறையின் மூலம் தேவையான வேளாண் உபகரணங்கள், மரக்கன்றுகள், சொட்டு நீர் பாசன உபகரணங்கள் ஆகியவை மானிய திட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் பகுதிகளுக்கு ஏற்ற விவசாயத்தை தேர்வு செய்து அரசு நலத்திட்டங்களை பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்“ என்றார்.

இந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செல்வம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story